பூமியின் சுற்றுச்சூழலில் மனிதர்களால் பல்வேறு வகையில் வெளியேற்றப்படும் கரியமிலவாயு உள்ளிட்ட கார்பனின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பதால்,
பூமியின் சுற்றுச்சூழலில் வெப்பத்தின் அளவு அதிகரித்தபடியே இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இப்படி பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால், பூமியில் வாழும் உயிரினங்கள் பலவகையிலும் பாதிக்கப்படும் என்பதால் பூமியின் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் கரியமில வாயு உள்ளிட்ட கார்பனின் அளவை கடுமையாக குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதன் விளைவாக இந்த கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக ஐநா மன்றம் சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் சர்வதேச மாநாடுகளை நடத்தி வருகிறது. அத்தகைய மாநாடு தான் தற்போது டர்பனில் நடந்து வருகிறது. நாடுகள் வெளியிடும் கார்பனின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட கியோடோ ஒப்பந்தம் விரைவில் முடிவடைய இருக்கும் பின்னணியில் டர்பன் மாநாடு இதற்கான அடுத்த கட்ட நகர்வை முன்வைக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சுற்றுசூழலியலாளர்கள் மத்தியில் பெரிதும் நிலவுகிறது.
ஆனால் இந்த மாநாட்டில் பெரிய தீர்வு திட்டம் ஒன்றும் உருவாகாது என்கிறார் இத்தகைய மாநாடுகள் பலவற்றில் கலந்துகொண்டவரும் சென்னையைச்சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலருமான கருணாகரன் அவர்கள்.
மேற்குலக நாடுகள் சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடி, வளர்ந்துவரும் நாடுகள் இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு நிற்பது போன்ற பல்வேறு காரணிகளால், டர்பன் மாநாட்டில் கியோடோ ஒப்பந்தத்திற்கு அடுத்த கட்ட ஒப்பந்தம் தொடர்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படாது என்று அவர் கருதுகிறார்.


0 கருத்துரைகள்:
Post a Comment