அம்பாறை மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் குற்றஞ்ஞாட்டினார்
கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கான 2012ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வரவு செலவு திட்டத்தில் 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதிகளை பகிர்தல் தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை கல்முனையிலுள்ள பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாயலத்தில் நடைபெற்றுள்ளது.
வழமையாக இது போன்ற கூட்டங்களுக்கு வைத்தியசாலைகளின் உயர் அதிகாரிகள் அழைப்பது வழக்கம். எனினும் இன்றைய கூட்டத்திற்கு மாகாண சுகாதர அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டதாக தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு ஜவாத் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு வைத்தியசாலைகளின் உயர் அதிகாரிகள் அழைக்கப்படாமை குறித்து தான் வினவியதற்கு, கிழக்கு மாகாண அமைச்சராகிய தானே அழைப்புவிடுக்க வேண்டாம் என உத்தரவிட்டதாக அமைச்சர் சுபையிர் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டார்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 7 மில்லியன், பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 3 மில்லியன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு 5.5 மில்லியன் மற்றும் அட்டளைச்சேனை வைத்தியசாலைக்கு 5 மில்லியன் என குறித்த 29 மில்லியன் ரூபாவை பகிர்வது என குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம், பாலமுனை, ஆலையடி வேம்பு போன்ற சிறு வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சம்மாந்துறை, அட்டானைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தும் மாகாண சபை உறுப்பினர்களும் இந்த முறையற்ற விதத்தினால் நிதியொதுக்கீட்டு துணை போகின்றனர் என ஜவாத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பல சிறிய வைத்தியசாலைகள் இந்நிதி வழங்களில் புறக்கணிக்கப்பட்டமையினால் குறித்த கூட்டத்தை நான் பகிஷ்கரிப்பு செய்ததோடு, இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரர் மொஹான் விஜயவிக்ரமவசிடம் முறையிடவுள்ளதாகவும் ஜவாத் மேலும் தெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாதின் குற்றச்சாட்டு தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிரிடம் வினவியதற்கு,
குறித்த நிதியொதுக்கீடு கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்டமைக்கிணங்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிதியொதுக்கீட்டுக்காக வைத்தியசாலைகளை தெரிவு செய்வதற்கு கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பிலான ஜவாட்டின் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கின்றேன். அத்துடன் ஜவாத் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை தொகுதியிலுள்ள இரண்டு வைத்தியசாலைகளும் மத்திய அமைச்சின் கீழ் உள்ளன.
இந்த வைத்தியசாலைகளுக்கு எம்மால் எதுவும் செய்ய முடியாது. இந்த கோபத்தின் காரணமாகவே ஜவாத் இவ்வாறு தேவையற்ற பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றார்.
மாகாண சபை உறுப்பினர் ஜவாத் கூறுவது போன்று கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழுள்ள 55 வைத்தியசாலைகளையும் இக்கூட்டத்திற்கு அழைக்க முடியும்.
அவர்களை அழைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வைத்தியசாலையினரும் நிதி கேட்பார்கள். அவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான நிதி எம்மிடம் இல்லை. இதனாலேயே அழைக்கவில்லை என்றார்.


0 கருத்துரைகள்:
Post a Comment