Home » » எல்லாருக்கும் என் உடம்பு வேணும். உனக்கு என் பணம் வேணும்

எல்லாருக்கும் என் உடம்பு வேணும். உனக்கு என் பணம் வேணும்

Written By edupudi on Feb 13, 2012 | 9:24 AM

ஆந்திராவிலுள்ள நெல்லூரில் வசிக்கும் நாடக நடிகர் மகள், சோனியா அகர்வால். அவரை நாடக நடிகையாக்கிப் பார்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட, 'என் மகளை பெரிய நடிகையாக்கி காட்டுகிறேன்' என்று சபதம் போட்டு, மகளை சென்னைக்கு அழைத்து வருகிறாள் தாய். கூடவே, தாய்மாமனும். பிறகு சோனியா முன்னணி நடிகையாகிறார். வறுமையை வென்று, பணத்தை ஜெயித்த வெறி அம்மாவுக்கு. வாழ்க்கையைத் தொலைத்த விரக்தி சோனியாவுக்கு. சினிமா உலகில் உயரமான இடத்துக்கு வர அம்மாவும், மகளும் இழந்ததும், பெற்றதும் என்ன? இறுதியில் சோனியா அகர்வால் என்ன ஆகிறார் என்பது கதை.



இப்படி ஒரு கதையில் நடிக்கத் துணிந்ததற்காக சோனியா அகர்வாலுக்கு 'பொக்கே' கொடுக்கலாம். எப்போதும் சோகம் ஒளிந்திருக்கும் அவர் முகம், இந்த கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. 'எல்லாருக்கும் என் உடம்பு வேணும். உனக்கு என் பணம் வேணும்' என்று தன் அம்மாவிடம் சொல்லும்போது, அப்படியொரு பாந்தமான நடிப்பு. சோனியாவின் அம்மாவாக வரும் ஊர்மிளா, பிரேமுக்கு பிரேம் வெளுத்து வாங்குகிறார். பணம் வந்து சேர்ந்ததும் அவரிடம் ஏற்படும் மாற்றங்கள், யதார்த்தம். தற்கொலை முயற்சியில் தோற்கும் மகளிடம், ‘நீ ஊருக்கே தேவதையா இருக்கலாம். உனக்கு வரம் கொடுக்கிற சாமி நான்தான்’ என்று சீறும்போது, வில்லித்தன வீச்சு.


முதல் படம் ரிலீசாவதற்காக சகலவிதமான வேலைகளையும் செய்யும் அறிமுக இயக்குனர் சதன், ஆர்ட்டிஸ்ட் கோ-ஆர்டினேட்டர் கஞ்சா கருப்பு, பத்தில் எட்டு படங்கள் ஹிட் கொடுத்த இயக்குனர் ராஜ்கபூர், நடிக்க வரும் பெண்களைப் பக்குவப்படுத்தும் ஜோதிலட்சுமி, தன் தங்கையை நடிகையாக்க ஆசைப்படும் பைனான்சியரின் சின்னவீடு கோவை சரளா, முதல் படத்திலேயே இயக்குனரைக் காதலிக்கும் நிக்கோல், பட்டுச்சட்டை பளபளக்கத் திரியும் மாமன் சுக்ரன், அடிக்கடி இடம் மாறி வேட்டு வைக்கும் மானேஜர் மனோபாலா, கண்முன்னால் நடப்பதை தட்டிக்கேட்க முடியாமல் தவிக்கும் சோனியாவின் தந்தை தேவராஜ் என கோடம்பாக்கத்தின் கேரக்டர்களை அப்படியே பதிவு செய்திருக்கின்றனர்.


நாக.கிருஷ்ணனின் கேமரா, கதைக்கு தேவையான அளவு காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. ஆதிஷ் பின்னணி இசை, சுமார் ரகம். பாடல்கள் பரவாயில்லை. கொஞ்சம் தடுமாறினாலும், ஆபாசமாகிவிடும் திரைக்கதையை கவனமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா. டி.வி நிருபரின் டைரி வாசிப்பில் கதையை நகர்த்திச் செல்வது பழைய பாணி என்றாலும், ‘புன்னகைப்பூ’ கீதாவின் அழகும், முடிவில் மனிதாபிமானம் கொண்டவராக அவர் எடுக்கும் முடிவும் புதுமை.


நாடே கொண்டாடும் முன்னணி நடிகை, எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருப்பதில் லாஜிக் இல்லை. ஒரு நடிகையின் சோக வாழ்க்கையைச் சொன்ன விதத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பது சரி. சினிமாவில் தவறான மனிதர்களை மட்டுமே காட்டிய இயக்குனர், அத்துறையில் இருக்கும் நல்ல மனிதர்களையும் காட்டியிருந்தால் நியாயமான படமாக அமைந்திருக்கும்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger