Home » » 43 ரன்களுக்கு சுருண்ட இலங்கை

43 ரன்களுக்கு சுருண்ட இலங்கை

Written By edupudi on Jan 12, 2012 | 10:12 AM

இலங்கை அணிக்கு மிகப் பெரும் அவமானம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்களுக்கு சுருண்டது.
இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. தென் ஆப்ரிக்க அணி 258 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று பார்லில் முதலாவது போட்டி நடந்தது. இது இந்த ஆண்டின் முதலாவது ஒரு நாள் போட்டியாகவும் அமைந்தது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஆம்லா சதம்: தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்தில் ஸ்மித்(6) ஏமாற்றம் அளித்தார். பின் காலிஸ், ஆம்லா சேர்ந்து பொறுப்பாக ஆடினர். காலிஸ்(72) ரன் அவுட்டானார். கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அசத்திய டிவிலியர்ஸ்(52) அரைசதம் கடந்தார். தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த ஆம்லா(112) சதம் அடித்தார். ஆல்பி மார்கல் 25 ரன்கள் எடுத்தார். "டெயிலெண்டர்கள்' தாக்குப்பிடிக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் மலிங்கா 5 விக்கெட் கைப்பற்றினார்.

விக்கெட் மடமட: கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி, தென் ஆப்ரிக்க "வேகத்தில்' சிதறியது. மார்னே மார்கல் பந்துவீச்சில் தரங்கா(0), கேப்டன் சங்ககரா(4), ஏஞ்சலோ மாத்யூஸ்(0) வெளியேறினர். டிசாட்சோபே வேகத்தில் தில்ஷன்(0), சண்டிமால்(4), ஜெயவர்தனா(2) நடையை கட்டினர். இதையடுத்து 6 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து தத்தளித்தது. ஸ்டைன் பந்தில் நுவான் குலசேகரா(6) அவுட்டானார். ராபின் பீட்டர்சன் சுழலில் மலிங்கா(1) போல்டானார். ஓரளவுக்கு போராடிய கோசலா குலசேகரா(19) மட்டும் இரட்டை இலக்கத்தை எட்டினார். இலங்கை அணி 20.1 ஓவரில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இது, இலங்கை அணியின் குறைந்த ஸ்கோர். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 55 ரன்கள்(1986, சார்ஜா) எடுத்திருந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் மார்னே மார்கல் 4, டிசாட்சொபே 3 விக்கெட் வீழ்த்தினர்.

நான்காவது குறைந்த ஸ்கோர்: நேற்று 43 ரன்களுக்கு சுருண்ட இலங்கை, ஒருநாள் அரங்கில் மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றது. முதல் இடத்தில் ஜிம்பாப்வே(35 ரன், எதிர், இலங்கை, ஹராரே, 2004) உள்ளது. 2, 3வது இடத்தில் முறையே கனடா(36 ரன், எதிர், இலங்கை, பார்ல், 2003), ஜிம்பாப்வே(38 ரன், எதிர் இலங்கை, கொழும்பு, 2001) அணிகள் உள்ளன.

மிகப் பெரும் வெற்றி: நேற்று அசத்தலாக ஆடிய தென் ஆப்ரிக்க அணி, ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் வித்தியாசத்தில்(258)வென்ற அணிகள் வரிசையில் மூன்றாவது இடம் பெற்றது. முதல் இரு இடங்களில் முறையே நியூசிலாந்து(290 ரன்கள், எதிர், அயர்லாந்து, அபர்தீன், 2008), தென் ஆப்ரிக்கா(272 ரன்கள், எதிர், ஜிம்பாப்வே, பெனோனி, 2010) உள்ளன.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger