"2ஜி வழக்கில், நான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பேன்," என்றார் கனிமொழி.2ஜி ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்று சென்னைக்குத் திரும்பும்
வழியில் இன்று காலை தில்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
கனிமொழி இன்று காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு திரும்புவதில் மிகுந்த மகிழ்ச்சி. ஜாமீன் கிடைத்திருப்பது முதல்படி. ஆனால், ஜாமீனில் செல்வதை விட, இந்த வழக்கில் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து வெளியே செல்வதையே முக்கியமானதாகக் கருதுகிறேன்," என்றார்.
அவர் இன்று மதியம் 1 மணியளவில் சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்க கருணாநிதியே நேரில் செல்லக்கூடும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னைக்கு வரும் கனிமொழிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுக்கவுள்ளனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.விமான நிலையத்தில் இருந்து அறிவாலயத்துக்கு வந்து, அங்கிருந்து வீட்டுக்குச் செல்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வரை கனிமொழியை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
"இனி நீ... பூங்கொடி அல்ல; போர்க்கொடி", "பொறுத்தார் பூமியாள்வார்", "ஏழைகளின் தோழி," "கழகத்தின் தியாகமே", குடும்ப விளக்கே", 'சூரியக் கதிரே" என்றெல்லாம் அதில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:
Post a Comment