Home » » மலேரியாவுக்கு தடுப்பு மருந்து

மலேரியாவுக்கு தடுப்பு மருந்து

Written By edupudi on Dec 27, 2011 | 6:01 PM

மலேரியாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.


இன்றைய நிலையில் மலேரியாவை முழுமையாக தடுக்கவல்ல வலிமையான தடுப்பூசி என்று ஒன்று இல்லை. காரணம், மலேரியாவில் பல வகைகள் இருக்கின்றன. எனவே ஒரு வகை மலேரியாவை தடுக்கவல்ல மருந்தால், மற்றவகை மலேரியாவை தடுக்க முடியவில்லை.
அதைவிட முக்கியமாக மலேரியாவை பரப்பும் ஒட்டுண்ணி மனிதர்களின் ரத்தத்தில் எப்படி கலக்கிறது என்பது தொடர்பில் முழுமையான தகவல் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லை.

இதுபோன்ற காரணிகளால், அனைத்து வகையான மலேரியாவையும் தடுக்கவல்ல தடுப்பு மருந்து என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாமலே இருந்து வருகிறது.
ஆனால் இதில் விரைவில் மாற்றம் வரும் என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள்.
இவர்களின் நம்பிக்கைக்கு காரணம் இருக்கிறது. மனித இரத்தச் கலங்களுக்குள் மலேரியாவை பரப்பும் ஒட்டுண்ணி எப்படி உள்ளே செல்கிறது என்பது தொடர்பில் இந்த விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
மலேரியாவால் தொற்றுண்ட ஒருவர்
மலேரியாவால் தொற்றுண்ட ஒருவர்
அதாவது மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணியை காவும் கொசு(நுளம்பு) மனிதர்களை கடிக்கும்போது அந்த கொசுவின் இரத்தம் குடிக்கும் குளாய்கள் வழியாக மலேரிய ஒட்டுண்ணி மனிதர்களின் உடம்பிற்குள் புகுகிறது.
அப்படி உடலுக்குள் புகுந்ததும் இந்த மலேரிய ஒட்டுண்ணி முதலில் சிகப்பு இரத்தக் கலங்களை(செங்குருதிச் சிறுதுணிக்கைகளை) தாக்கி அதற்குள் புகுந்து அங்கிருந்தபடி மற்ற சிவப்பு இரத்தக் கலங்களை தாக்கி அதன் வழியாக உடலின் அனைத்து பாகங்களையும் தாக்குகிறது. அதுவே மலேரியாவாக மனிதர்களை பாதிக்கிறது.
இந்த மலேரிய ஒட்டுண்ணி, மனிதர்களின் சிகப்பு ரத்த கலங்களுக்குள் ஊடுருவுவதை தடுத்தால் மலேரிய தாக்குதலை தடுக்க முடியும் என்று கருதிய ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.
மலேரிய ஒட்டுண்ணியிடம் இருக்கும் "PfRh5 என்கிற பொருளை, சிகப்பு ரத்த செல்களின் மேல்புறத்தில் இருக்கும் குறிப்பிட்ட வேதிப்பொருள் விரும்பி வரவேற்று ஏற்றுக்கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இதற்கடுத்தபடியாக தன்னை அழிக்கப்போகும் மலேரிய ஒட்டுண்ணியின் ஆபத்தான பொருளை, சிகப்புிரத்த கலங்கள் ஏற்காமல் செய்வதன் மூலம் மலேரிய ஒட்டுண்ணி மனித உடலில் புகாமல் தடுக்க முடியும் என்று முடிவு செய்த ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தனர்.
முதல் கட்டமாக இந்தப் புதிய தடுப்பு மருந்தை விலங்குகள் மத்தியில் பரிசோதித்தபோது நல்ல பலன் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், இதன் அடுத்த கட்டமாக இந்த தடுப்பு மருந்தை மனிதர்களில் பரிசோதிக்கப்போவதாகவும் இந்த பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், மலேரியாவுக்கான முழுமையான தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்கள்.
உலக அளவில் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் பேர் மலேரியாவால் இறக்க நேர்வதாக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த புதிய தடுப்பு மருந்து அதை தடுக்கக்கூடும் என்பதே விஞ்ஞானிகளின் எதிர்கால நம்பிக்கையாக இருக்கிறது.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger