பகவத் கீதையில் வன்முறை வாசகங்கள் உள்ளதா க கூறி ரஷ்யாவில் உள்ள பழமைவாத கிறிஸ்தவ குழு ஒன்று, சைபீரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பகவத் கீதை தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும், ரஷ்யாவில் வேற்றுமைகளை விதைப்பதாகவும் கூறி அந்த அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தது.
இது குறித்த தகவல் வெளியானபோது, இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இப்பிரச்னை தொடர்பாக ரஷ்ய அரசின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றதோடு, தங்களது ஆட்சேபத்தையும் தெரிவித்தது.
இதையடுத்து ரஷ்ய தூதரை தொடர்புகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்னையை தீர்க்க இந்தியாவுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரும் உதவிசெய்வதாக உறுதி அளித்திருந்தார்.
சுமார் ஆறு மாதகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை சைபீரிய நீதிமன்றம் அளித்தது. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.
எஸ்.எம். கிருஷ்ணா வரவேற்பு
இந்த தீர்ப்புக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆதரவு அளித்த ரஷ்ய அரசுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். இந்தியாவில் பகவத் கீதை புனித நூலாக போற்றப்படுவதால் அதற்கு தடை விதிக்கக் கூடாது என்று ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ரஷ்ய அரசை கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment