ஜப்பானிலுள்ள ஃபுக்குஷிமா அணு உலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒன்பது மாதங்களாகியுள்ள நிலையில், அந்நாட்டின் முன்னணி நிறுவனம் ஒன்றால் குழந்தைகளுக்காக
தயாரிக்கப்படும் பால் மாவில் கதிரியக்க சீசியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் மட்டுமே விற்பனையாகும் அந்த பால் மாவை தயாரிக்கும் நிறுவனமான மெய்ஜி, நான்கு லட்சம் டப்பாக்களை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளது.
எனினும் ஜப்பானிய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள கதிரியக்க அளவைவிட தமது பால்மாவில் கதிரியக்கம் குறைவாகவே உள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
திரவ நிலையிலிருந்து பாலை, மாவாக மாற்றும் நடவடிக்கையின் போது, கதிரியக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சீசியம் தமது பால்மாவில் நுழைந்திருக்கலாம் என மெய்ஜி நம்புகிறது.
கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஒரு நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்ட பிறகு, கதிரியக்கத்தால் உணவுப் பொருட்கள் மாசடைவது குறித்த அச்சங்கள் அங்கு மேலோங்கி வரும் நிலையில், இந்தச் செய்தி வந்துள்ளது.
இந்தச் செய்தி வந்த பிறகு பங்குச் சந்தைகளில் மெய்ஜி நிறுவனத்தின் பங்குகள் பத்துசதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு முன்னர் ஜப்பானில் இருந்து ஏற்றுமதியான மாட்டிறைச்சி மற்றும் அரிசியும் சீசியத்தால் மாசடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மெய்ஜி நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து 200 மைல்களுக்கும் குறைவான தொலைவிலேயே உள்ளது.


0 கருத்துரைகள்:
Post a Comment