Home » , » ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து ;மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி

ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து ;மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி

Written By edupudi on Jan 4, 2012 | 3:38 PM

இறந்த மகளின் உடலுடன் பெற்றோர் பயணித்த ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் தாயும், தந்தையும் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ரேவதி (30), உடல்நலம் பாதிக்கப்பட்டு அத்தியந்தலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த தகவல் அறிந்த காட்பாடியை அடுத்த வீரந்தாங்கலில் வசித்து வந்த ரேவதியின் தந்தை நாகராஜ் (68), தாயார் மோகனா (55) உள்ளிட்ட 2 பேரும் ரேவதியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஆரணிக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்சை கொட்டையூரைச் சேர்ந்த தயாநிதி (22) ஓட்டினார். ஆம்புலன்ஸ்சில் ரேவதியின் தந்தை, தாய், உதவியாளர் ஏழுமலை (19) உள்ளிட்டோர் இருந்தனர்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் திருவண்ணாமலை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளைவில் ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது திருவண்ணாலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ்சுடன், ஆம்புலன்ஸ் நேருக்கு நேராக மோதியது.

இதில் ஆம்புலன்சில் பயணித்த நாகராஜ், மோகனா உள்ளிட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் தயாநிதி, உதவியாளர் ஏழுமலை, பஸ் ஓட்டுநரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுந்தரம் (43), பஸ் நடத்துனரான ஓசூரைச் சேர்ந்த ஜலந்தர்குமார் (39), பஸ் பயணியான புதுச்சேரி உருவியாரை சேர்ந்த பெரியசாமி (40) உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த தயாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமானதால், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 4 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

திருவண்ணாமலை டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger