Home » » 7 ஆம் அறிவு – விமர்சனம்

7 ஆம் அறிவு – விமர்சனம்

Written By edupudi on Dec 2, 2011 | 10:43 AM

‘பை பாஸ்’ சர்ஜரியே அவசியப்படுகிற அளவுக்கு நெஞ்சில் அறைந்து கொண்டு, ‘தமிழன்டா…’ என்று சீறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், அமைதியாக ஒரு பொறியை பற்ற வைத்திருக்கிறார்

ஏ.ஆர்.முருகதாஸ். அது தீயாகவும் பற்றலாம்.திரியிலேயும் புஸ் ஆகலாம். கோடிக்கணக்கான தமிழர்களின் ஸ்மரணையை பொறுத்த விஷயம் அது. அதே நேரத்தில் சீனாக்காரன் ஒருவனை அழைத்து வந்து, அதே சீனாக்கார்களை கெட்ட பசங்க என்று படம் எடுக்கவும் ஒரு திறமை வேண்டும். (தமிழன்டா!)
எடுத்த எடுப்பிலேயே போதி தர்மரின் வரலாற்றை டாகுமென்ட்ரி ஸ்டைலில் சொல்லிவிடுகிறார் டைரக்டர் முருகதாஸ். காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு போகும் பல்லவ நாட்டு இளவரசன் சூர்யா, போகிற இடத்தில் காட்டும் முரட்டு மோதலும் முயல்குட்டி சாந்தமும் அவ்வளவு ஈர்ப்பு. வினோத நோயால் சாகக் கிடக்கிற குழந்தையை ஈவிரக்கமில்லாமல் ஓரிடத்தில் போட்டு விட்டு வரும் சீனர்களிடமிருந்து குழந்தையை காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்கிற அந்த காட்சி, நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சி. அவர்களுக்கு வர்மக்கலையையும், மருத்துவ முறைகளையும் கற்றுத் தரும் போதி தர்மரை விஷம் வைத்து கொல்கிறார்கள் மக்கள். ஏனாம்? அந்த மண்ணில் அவர் புதைக்கப்பட்டால் தங்களை நோயே அண்டாது என்ற நம்பிக்கை. அது தெரிந்தும் புன்னகையோடு செத்துப் போகிற அவரை நினைத்தால் புல்லரிக்கிறது.

இன்னும் கொஞ்ச நேரம் காட்ட மாட்டார்களா என்று ஏங்குகிற நேரத்தில் பொசுக்கென்று கத்தரியை போட்டு நிகழ்காலத்திற்கு வருகிறார்கள். அப்புறம் எல்லாமே தமிழ்சினிமாவின் ஃபார்முலாவுக்குள் சிக்கிக் கொள்கிறது. கவனிக்காமல் போன வில்லன் ‘இப்ப திரும்பி வந்து பார்ப்பான் பாரேன்…’ என உள் மனசு நினைக்க, அப்படியே வருகிறான் அவன். ‘லிப்ட் திறக்கும். அவன்தான் வரப்போகிறான்’ என்றால் அதேதான் நடக்கிறது. இப்படி ரசிகர்களின் யூகங்களை பொய்யாக்காமல் நகர்கிறது மொத்த கதையும், அந்த க்ளைமாக்ஸ் உட்பட.
போதிதர்மரின் வம்சா வழியில் பிறந்தவர்களிடத்திலும் அவரது டி.என்.ஏ இருக்கும். அதைக்கொண்டு மீண்டும் போதி தர்மரின் திறமைகளை கொண்டு வரலாம் என்று நம்பும் ஆராய்ச்சி மாணவி ஸ்ருதிஹாசன் அதற்கான முயற்சியில் ஈடுபட, அவரை கொல்ல வருகிறான் சீனா வில்லன். இந்த ஆராய்ச்சி பற்றி இந்தியாவிலிருந்தே ‘போட்டுக் கொடுக்கிறார்’ புரபசர் ஒருவர். ஸ்ருதியை காப்பாற்ற துடிக்கும் போதி தர்மரின் வாரிசான சூர்யாவுக்கும் வில்லன் டாங்கேவுக்கும் (ஜானி) நடக்கிற யுத்தமும், அதற்கான முன்னேற்பாடுகளும்தான் மிச்ச மீதி.

ஆறாம் நு£ற்றாண்டு போதி தர்மரின் பிம்பத்திற்கு அவ்வளவு தத்ரூபமாக உயிர் கொடுத்திருக்கிறார் சூர்யா. ஆனால் சர்க்கஸ் சூர்யாவுக்கு அத்தனை வேலையில்லை. அவரே செய்வதாக சிலாகிக்கப்பட்ட சில சர்க்கஸ் காட்சிகளில் கூட கிராபிக்ஸ் நிரப்பல்கள்(?) தமிழனின் வீரம் குறித்து அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது. ‘ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை தாக்குறது வீரம் இல்ல. இலங்கையில் நடந்தது துரோகம். நிச்சயம் திருப்பி அடிக்கணும்’ என்று சீறும் போது தமிழனின் டி.என்.ஏக்கள் அத்தனையும் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும். இப்படி ஒரு கதைக்காகவும் வசனங்களுக்காகவும் கோடிகளை அள்ளி இறைத்த தயாரிப்பாளர் உதயநிதிக்கும் மனசார பாராட்டுகள்.
சட்டை பட்டனை கூட கழற்றவில்லை. ஆனால் தியேட்டரையே ஆக்ஷன் மூடுக்கு கொண்டு வருகிறார் அந்த ஹாலிவுட் நடிகர் ஜானி. ‘நோக்கு வர்மம்’ மூலம் அவர் சிட்டியையே துவம்சம் ஆக்குவதும், ஒரு போலீஸ் ஸ்டேஷனையே அந்தல சிந்தலயாக்குவதும் கூட ஓ.கே. ஒரு மீடியா கூடவா இதைப்பற்றி விவாதிக்காது? அப்படி காட்டப்படுகிற ஒன்றிரண்டு நியூஸ் விஷுவல்களும் இடம் தப்பி அமைந்திருக்கிறது.
ஜானியின் பார்வையும் நடையும் எவ்வித அலட்டலும் இல்லாத சேசிங்கும் வில்லன் என்கிற கோட்பாட்டையெல்லாம் மறந்து ரசிக்க வைக்கிறது.
ஒரே ஒரு தெருநாய்க்கு செலுத்தப்படும் விஷக்கிருமி எப்படி அத்தனை மனித உயிர்களை பலிவாங்குகிற அளவுக்கு பரவுகிறது என்பதை சட் சட்டென்று புரிய வைக்கிற அந்த விஷுவல் காட்சிகளுக்காக முருகதாசுக்கு ஒரு சபாஷ்.ஆராய்ச்சி மாணவி என்கிற பனங்காயை சுமந்த பரிதாபக் குருவியாக ஸ்ருதிஹாசன். அதற்கு மேல் என்ன சொல்வது?
ஹாரிஸ் ஜெயராஜின் ‘முன்னந்தி சாரல் நீ’ மட்டும் அழகான மெலடி. அடிக்கடி வரும் மற்ற பாடல்கள் குட்டி குட்டி இடைவேளைகள். பீட்டர் ஹெய்னின் சண்டை பயிற்சி நிஜமாகவே பிரமிப்பு. இந்த கதை இங்குதான் ஆரம்பித்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது ஆன்ட்டனியின் எடிட்டிங்.
ஏழாம் அறிவு, யாருக்கும் எட்டாத துணிவு…! அந்த வகையில் முருகதாஸ் டீமுக்கு ஒரு சபாஷ்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger